ஒரு தமிழ்ச்சிறுகதை; ஒரு வாசிப்புணர்வு..
ஓர் எழுத்தாளரின் அனைத்துக் கதைகளையும் ஒட்டுமொத்தமாக
வாசித்து அவரின் எழுத்தாள ஆளுமையைக் கணிக்கும் வழக்கம் பொதுவாக இலக்கியவாதிகள்
செய்வது. எழுத்தாளர் யாரென்றே சட்டை பண்ணாமல் ஒவ்வொரு கதையும் தனித்தனியாக வாசித்து நகர்வோர்
பலர். ஒரு சிறுகதையை வாசிக்கும்போது எழுத்தாளரின் பிம்பம் நம் மனத்தை
ஆக்கிரமிக்கக் கூடாது. அவரின் முந்தைய கதைகளை வாசித்திருந்தால், ஒரு புதுக்கதையை வாசிக்கும்போது
நம் சிந்தனையில் அவை இருக்கக்கூடா. எழுத்தாளன் எவ்வளவு பெரிய ஆளுமையாக பலரால்
கருதப்பட்டாலும் அவ்வாளுமை நமக்கு தற்போது வாசிப்பில் தேவையேயில்லை. எழுத்தாளனின்
ஆளுமை; அவனின் முந்தைய
கதைகளின் நினைவுகள் - கையிலிருக்கும் கதை
வாசிப்பை புதிதாக வாசிக்கிறோமென்ற உணர்வை சிதைத்துவிடும். புதிய கதைக்கு புதிய
மனத்தோடு வருவதே சரி.
ஜெயகாந்தன் எடுத்துக்கொண்ட கதை நிலைக்களம் தமிழ்ப்பார்ப்பனர்கள் வாழ்க்கை.
அவர்கள் பிராமண ஆசார வாழ்க்கையைக் கொண்டதால்
இக்களம் பிராமணர்கள் வாழ்க்கை.
விதவைகளை ஆசாரத்துக்குள்ளாக்கி – மொட்டையடித்து, நகை நட்டுக்களை
அவிழ்த்துவிட்டு, காவி உடையில்
வீட்டுக்குள்ளேயே வாழ்க்கையை அமைப்பது; அவர்கள்
அமங்கலச்சின்னங்கள் என எடுப்பது பிராமண
வாழ்க்கை. இங்கே மொட்டையடிப்பதும் காவி உடையும் மட்டுமே பிற சாதி மக்களிடமிருந்து
மாறுபடுகின்றன. மற்றபடி அவர்கள் விதவைகளும் நகை நட்டுக்களணியாமல்
வெள்ளைச்சீலையணிந்த அமங்கலச் சின்னங்களாகவே
நடாத்தப்படுகிறார்கள் இன்றும்.
அன்றும் இன்றும் மாறாதபடி இந்து விதவைகள் எல்லா சாதிகளிலும் அமங்கலச்சின்னங்களாக தமிழ்ச்சமூகம் காட்டும் என்ற நிலையிருக்க
பிராமண விதவையை கதாமாந்தராக வைத்து என்ன சிறப்பாக காட்ட முடியுமென்று எனக்குத்
தெரியவில்லை. பல எழுத்தாளர்கள், சினிமா
இயக்குனர்களுக்கு பிராமண-ஈடுபாடு
இருக்கிறது. பிராமணர்கள் கூட அவர்கள்
வாழ்க்கையில் பிரச்சினையான விசயங்களைப் பற்றி எழதுவதில்லை. அல்லது எழுதுவோர் குறைவு.ஆனால் பிராமணரல்லாதவர்களுக்கு அவற்றை
நன்கறிந்து விமர்சிக்க (அல்லது போற்ற) தாங்கமுடியா ஆர்வமிருக்கிறது. குறிப்பாக சிலரைச்
சொல்லலாம். எழுத்தாளர்களில் ஜெயகாந்தன்; இயக்குனர்களில் பாரதிராஜா. பாலச்சந்தர்.
ஓர் எழுத்தாளனின் முதல் நிலைக்களம் அவன் பிறந்து வாழ்ந்த சூழலும் அண்டைச்சமூகமும்.. அதுதான் அவனுக்கு ஒரு நல்ல கருவி. அவன்
ஆழ்மனத்தோடு எப்போதும் உறவாடுவது. அங்கே உண்மையான ஈடுபாட்டோடு எழுத முடியும். மாறாக, அவன் பிறந்து
வாழாத இன்னொரு
நிலைக்களத்தை எடுக்கும்போது, அதை இவன் அச்சுமூகத்தோடு உறாவாடினானோ?
அல்லது வெளியிலிருந்து
பார்த்து மையல் கொண்டானோ? என்ற கேள்விகளை எழுப்பும். ஜெயகாந்தனைப் பொறுத்தவரை இரண்டாவதே
பொருந்தும். கடலூர்தான் ஜெயகாந்தன்
பிறந்து வளர்ந்த ஊர். கதை அங்குதான்
நிகழ்கிறது. ஆனாலும் கடலூர் மக்களின் வாழ்க்கையைக்
காட்டுவதாக இல்லாமல் பொதுவாக எங்கும் நிகழும் பிராமண வாழ்க்கையை
காட்டுகிறார். கதையில் வரும் பாட்டி -
கடலூரில் வாழ்ந்தாலென்ன? சென்னை மாம்பலத்தில் வாழ்ந்தாலென்ன? ஒரே மாதிரியான வாழ்க்கைதான் பிராமணர்களுக்கு.
பிராமண கதாமாந்தர்கள் என்றால் ஒரு மோகம் போலும். பிராமணீயத்தை பிராமணர்களே
அழுத்தமாக நினைக்காமலிருக்க மற்றவர்களுக்கு இருக்கக் காரணம்? பிராமண ஆசாரம், மடி என்று வரும்போது, அவற்றை கேள்விக்குறிகளாக்கும் ''புரட்சி'' பண்ணும்போது ஓர் அட்டகாசமான கதையை உருவாக்க
முடியும். அதை பிராமண கதாமாந்தர்களை
வைத்தே செய்யும்போது பலர் வித்தியாசமாக இருக்கிறதே என்ற பரபரப்பை உருவாக்க
முடியும். பரபரப்புக்காக பிராமண மையக்கதைகள் என்பது என் முடிபு.
அதில் வெற்றியும் கண்டுவிட்டார். இவ்வகையில் எ.கா: சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல். யுக
சந்தி, அக்னிப்பரீட்சை போன்ற சிறுகதைகள் பிரபலம். இவை பிராமண
வாழ்க்கை-நெறி தவறுவது அல்லது வழுக்கல்கள் பற்றியே அரக்கபரக்க பேசுகின்றன. ஆனால் பிற ஜாதியினரின் வாழ்க்கை மரபுகளை இவர்
கதைகள் எடுத்துப் பேசியிருந்தால், பெருமாள் முருகன். சுஜாதா போன்றோருக்கு நேர்ந்த கதியே ஏற்பட்டிருக்கும். ‘மாதொரு பாகன்’' கவுண்டர்களாலும் ';இரத்தம் ஒரே நிறம்;' நாடார்களாலும் எதிர்க்கப்பட்டன. இரு
நாவல்களுமே நிறுத்தப்பட்டன. பிராமண வாழ்க்கை;
இல்லாவிட்டால், தலித்துகளின் வாழ்க்கை (சினிமாவுக்குப் போன சித்தாளு குறுநாவலில்
தலித்துகளே கதாமாந்தர்கள்.)- எழுதினால் கேட்பதற்கு நாதி கிடையாது.
இச்சிறுகதையின் தமிழ்நடையில் என்னால் ஒன்றுபட முடியவில்லை. பிராமணர்களின்
வாழ்க்கையோடு வடமொழி ஊறியது. அன்றாட குடும்ப உரையாடல்களில் வடமொழிச் சொற்கள்
பரம்பரை பரம்பரையாக
விரவிக்கிடப்பது. மற்றவர்கள் “தண்ணீர் கொண்டுவா” என்றால்,
இவர்கள் “ஜலம் கொண்டுவா” என்பார்கள். இப்பிராமண குடும்பக்கதையில் நாம் என்ன
நினைப்போம்? பிராமண கதாமாந்தர்களின் உரையாடல்களில் சமஸ்கிருதச் சொற்கள் ஓரளவுக்காவது நிரம்பியிருக்குமென்று. ஆனால் ஒரேயொரு சொல் தவிர வேறில்லை. பாட்டியின்
பேச்சில் வரும் ''அச்சான்யம்'' என்ற சொல்லும்
பெயர்த்தி கீதாவின் மடலில் வரும் ''முகாலோபனம்'' என்ற சொல்லையும்
தவிர. ஆசிரியரே வடமொழிச்சொற்களை உள்ளுழைய
விடுகிறார் வருமாறு: யுகம், ஸ்தூலம்; பிரசன்னம்; ஸ்படிகம்; ஆத்மார்த்தமாக; அத்யந்த சோகம்; உபாத்யாயை பயிற்சி; வைதயம்; ஜீவிதம்; விகஸித்தாள்; பூடகம்; நிர்த்தாட்சண்யம்; தூஷனை. இவைகளுக்கீடான தமிழ்ச்சொற்கள்
இல்லையா? அவை கதையைக் கெடுத்துவிடுமா? எதார்த்தத்துக்கு
இடைஞ்சலாகிவிடுமா? இச்சொற்கள் கதாமாந்தர்கள் உரையாடலகளில்
தோன்றியிருந்தால் மெத்தவும் சரி. எதார்த்தத்துக்காக
சரி. நம்மை ஒன்றுபட வைக்க உதவும்.
கீதா தன் பெற்றோருக்கு எழுதும் மடல்: இப்படி செந்தமிழாக இருக்குமா? எக்குழந்தை பெற்றொருக்கு இப்படி எழுதும்? வெள்ளரிப்பிஞ்சுகள்.
ஆனால் பாட்டி நாவிதனுக்கும் தன் சிறு பெயர்த்தி ஜானாவுக்கு கொடுப்பதும்
வெள்ளிரிப்பிஞ்சுகள்..
இச்சிறுகதை மாந்தர்கள் -- கெளரிப் பாட்டி, அவரின் ஒரே மகன்
கணேசன் அய்யர். மனைவி பார்வதி
அம்மாள்; ஆறு வயது பெண்குழந்தை ஜானா; 20 வயது மீனா,
விடலைப்பருவத்து
பையனொருவன் அம்பி. அம்பி; அத்திம்பேர்; மன்னி என்பனவெல்லாம் பிராமண உறவுச் சொற்கள். குழந்தைக்குப் பெயரே அம்பியா? அல்லது கூப்பிடு பெயரா?
பாட்டியை பெரிய இடத்துக்குக் கொண்டு போய் வைக்கிறார். வழிப்பாதையில் நாவிதனைப்பார்த்து அவர் பேசும்
பேச்சு நம்ப முடியாதது.
நாவிதனை அத்தொழில் செய்வதே தப்பு என்றும், அவன் பிள்ளைகளை அத்தொழிலுக்கு வராமல் பார்த்துக்கொள்
என்பதும், பாட்டியை உயரத்துக்கொண்டு போய் வைப்பதற்கு எழுத்தாளர்
மெனக்கிடுவது தெரிகிறது. ஆனால்
எதார்த்தமாகாது. சிறுகதைகளில் எதார்த்தங்களாக
காட்சிகள் வடிக்கப்படும்போது கதை
சிறப்படைகிறது..கற்பனைகளே கதைகள் என்றாலும் வாழ்க்கை பிரதிபலிப்புக்கள். தன் தொழிலை விருப்பமில்லாமல் செய்பவனிடம் பேசலாம் அல்லது வருமானத்தைக்காட்டி பேசலாம். ஒன்றுமே இல்லை. உன் மகனை உன்னை மாதிரி
தகரப்பெட்டியைத் தூக்க வைக்காதே
என்பது அத்தொழிலைச் ‘செய்யவிடாதே என்பதா? இல்லை, ஓரிடத்தில்
நிலையாய் இருந்து செய்ய வை!’ என்பதா? அத்தொழிலே இழிதொழில் அந்த இழிவு உன் மகனுக்கு
வராதபடி பார்த்துக்கொள் என்று சொல்வதாகத்தான் தோன்றுகிறது. வேலாயுதமும்
(இதுதான் நாவிதனின் பெயர்) என்னைப் போலத்தான்
நினைத்திருப்பான். அவனுக்கு அது
பழகிப்போயிருக்கும்.
பாட்டியை விதவையாக அறிமுகப்படுத்தும்
போது - கதையே அவ்வறிமுகத்தில்தான் தொடங்குகிறது - சிற்பி கவனமாகச் செதுக்குவதைப் போல
செதுக்குகிறார். அப்போதே எனக்குத் தோன்றியது: இவளை வைத்து விளையாடப்போகிறாரென்று.
என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. பாட்டியின்
பெயர்த்தியும் விதவை. அவள் மறுமணம்
செய்வதுதான் அப்புரட்சி. அதைக் கேட்டு
குடும்பமே அதிர்கிறது. பாட்டியைத்தவிர. தாயும் தகப்பனும் அதிர்ந்தால் சரி.
அவர்கள் குழ்ந்தைகளுமா அதிர்ச்சியடைகின்றன? அவர்களுக்கு
விடலைப்பருவத்திலேயே ஆசாரங்களைக் காக்க வேண்டுமென்று
தோன்றிவிட்டதா? அவர்களை இக்காலத்து இளைஞர்களாக சற்றுமுன் காட்டியதை
மறந்துவிடுகிறார்! 20 தே வயதான மீனாவின் முகம் அருவெறுப்பால்
சுளித்தது. அம்பியின் முகம் விளக்கெண்ணய் குடித்தது போலானது என்கிறார்
ஆசிரியர். அதாவது அவர்கள் 30 வயது விதவை
அக்காள் மறுமணம் செய்யப்போகும் விசயத்தை தெரிந்த்வுடன் அதிர்ச்சியால் இப்படி
ஆகிறார்கள். 20 வயதிலிருந்தே குடும்பங்களில்
ஆசாரக்காவலர்கள் உருவாகிறார்கள் என்கிறார்.
மறுமணத்தில் மட்டும்தான் ஆசாரம் வந்து தடுக்கிறது; இவர்கள் இருவரும் மாட்னி ஷோ போவதும் இக்கால
இளைஞர்கள் போல வாழ்வதிலும் இவர்கள் அக்காள் பிராமண விதவைக்கோலத்தில் இல்லாமல், நல்ல கலர்கலரான சேலையுடுத்தி,
ஆசிரியைப் பயிற்சி பெற்று வேலைக்குச் சென்று இன்னொரு
ஊரில் தன்னந்தனியாக வாழ்வதும் இவ்விரு
ஆசாரக்காவலர்களுக்கு ஆசாரப்பங்கங்களாகப் படவில்லை! நகைமுரண்!!
இறுதியில் பாட்டி இங்கிருக்கும் மூன்று குழந்தைகள் வேண்டாம் (அவர்கள் ஆசாரமோ?) தன் மகன்-மருமகள்
வேண்டாம் (இது சரி - ஆசாரமானவர்களல்லவா? விட்டு ஓடிவிடவேண்டும் !) தன்
பெயர்த்தியின் விதவை மறுமணம் நன்று.. அவளுக்குத் துணை வேண்டும் என்று போய்விடுவது கதை முடிவு.
விதவை மறுமணத்தை ஆதரிக்க இன்னும் கொஞ்சம் எதார்த்தமாக சித்தரித்து கொஞ்சம் பொருத்தமான
கதாபாத்திரங்களையும் செயல்களையும் காட்டி உணர்வுப்பூர்வமான நடையில்
எழுதியிருக்கலாம். நம் தமிழ் பெண்
எழுத்தாளர்களில் சிலர் உணர்ச்சிப்பூர்வமாக. நன்றாக
எழுதியிருப்பார்கள். இது பெண்ணியம்
சார்ந்த கதை. பெண்கள் எழுதும்போது
இப்படிப் பட்ட கதைக்கருக்கள் உயிர்பெற்று நம்மை ஆழ்த்தும் வலிமை பெறுகின்றன. பாம்பின் கால் பாம்பறியும் ஆணுக்கு
இளம்விதவையின் மறுமணம் கைதட்டல்களை வாங்கித்தரும் ''புரட்சி'' மட்டுமே. பெண்ணுக்கு
வாழ்க்கைப்போராட்டம் . பசியை தத்துவ ரீதியாக பார்க்க முடியாது. பட்டறிவால் மட்டுமே உணர முடியும்.
கதையில் ஒன்றேயொன்று என் கவனைத்தை மிகவும் ஈர்த்தது.. தன் மகனின் தாயன்பு தான்
ஒழுகும் ஆசாரத்திற்காக மட்டுமே - ஆசாரத்தைக்
கட்டிக்காத்து வருவதானால் தன்னை ஆசாரங்களின் உருவமாக - வெற்றிகரமான
அடையாளச்சின்னமாக - எடுத்தபடியால் அன்பு காட்டுகிறான் - என பாட்டிக்குத் தோன்றுகிறது. தான்
ஆசாரமில்லாமல் புரட்சி செய்திருந்தால் - இளம் வயது
விதவையாக இருக்கும்போது தன் உணர்ச்சிகளுக்கு வேறொருவனைத் தேடியிருந்தால்?- அல்லது
வாழ்க்கைத் துணையாக்கியிருந்தால்? - மகன் தன்னை
விட்டு போய் விட்டிருப்பான என நினைக்கிறாள். தாய்மீது
காட்டும் பரிவிலும் - அதுவும் வயதான் தாய் மீது காட்டும் அன்பில், மகன்கள் இலாப-நட்டம் உண்டோ? உண்டு
என்கிறது இச்சிறுகதை. அவ்வளவு கொடூரமானவனா ஒரு பிராமண மகன் என்ற கேள்வியை எழுப்புகிறது.
நல்ல வேளை கற்பனை J
‘’கொண்டு வந்தாலும்
வராவிட்டாலும் தாய்’’ என்றார் கருநாநிதி. அதாவது.
நெடுநாளைக்குப்பின் திரும்பி வந்தவன் தனக்கு என்ன கொண்டுவந்தான் என பிற
உறவுகள் (தாரம், உடன்பிறந்தோர்)
ஆலாப்பறக்க - தாயோ, உடல் இளைத்திருக்கிறானே என கவலை கொண்டு விசாரிப்பாள். இதுதான் கருநாநிதி காட்டும் தாயன்பு. இதுவே ஒரு
மகனுக்கும் உண்டு. ம்கனின் தாய்ப்பாசத்துக்கு விலையில்லை. ஆனால் இங்கே ஜெயகாந்தன் பேசும் விலை - ஆசாரங்களும் அவற்றைக் காத்தொழுகுதலும் !
இன்னொன்றும் உறுத்துகிறது. ஆசாரங்கள்
பலபல. அவற்றையொழுகும்போது சில வலியைத்
தரலாம்; இளம் விதவைகளை
மறுமணம் செய்ய விடாமல்ஆசாரத்துக்குள் அடைப்பது அதிலொன்று. ஓர் குடும்பத்துக்கு மட்டும் வலியைத்தரும்.. அதே சமயம், சில ஆசாரங்கள்
பிராமணர்கள் ஒழுகும்போது பிறருக்கு வலியைத் தரும். அதிலொன்றை இக்கதையும் காட்டுகிறது. பாட்டி-நாவிதன் நேர்முகம் பற்றிய வரிகளை
திரும்பிப்பாருங்கள்.
"பாலத்தின்மீது
கிராதியின் ஓரமாக, பாட்டியம்மாள் மீது பட்டுவிடக்கூடாதே என்ற பய உணர்வோடு
ஒதுங்கி நின்று....கும்பிட்டான் நாவிதன்''
''இரண்டு
வெள்ளிரிப்பிஞ்சுகளை அவன் ஏந்திய கைகளில் போட்டாள்''
எப்பெண்ணானாலும் சரி, மேல்
பட்டுவிடக்கூடாதேயென என்ற உணர்வுக்குப் பெயர் மரியாதை. அதே ஆணின் மீது தீண்டலாகிவிடக்கூடாதே என்று ஓர்
பெண் நினைத்தால் (வயதானவர் இல்லை;
மற்ற பெண்கள்) அதன் பெயர்
பயிர்ப்பு. ஆணோ, பெண்ணொ, இங்கே பயம் வேண்டாவுணர்வு. இங்கே இவனுக்கு ஏன்
பயம் வருகிறது? நந்தனார்
சிதம்பரத்துக்குள் நுழையும்போது எங்கும் வேதவொலி கேட்க, பயந்து நடுங்கினார் எனத் தொடக்கத்தில் சொல்கிறார் சேக்கிழார்..
‘’நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்
பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார்.
‘’செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து
பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெரும் இடையோதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்’’
தீண்டாமை பல உளவிளைவுகளை உருவாக்கும். அதில் பெரும்சுமையானது இப்பயவுணர்வு…தன் பிறப்பை நினைந்துநினைந்து வருந்துவது..
கொடுப்பது வேறு. ஏந்திய கரங்களில் ‘போடுவது’ வேறு. ஆக இங்கு தீண்டாமை பேணப்படுகிறது என்று
காட்டுகிறார். பாரதியார், தன் ''மலையாளம்''
என்ற தலைப்பிலுள்ள
கட்டுரையில், நம்பூதிரிகள் ஒரு
கம்பைக் கொண்டுபோகும்போது, அதன் மறுமுனை ஒரு தலித்தொருவனின் மேல்
பட்டுவிட்டால் கூட அக்கம்பின் வழியாக தங்கள் பிராமண புனிதம் கெட்டுவிட்டது என்று
கருதுவார்களாம் ! தீண்டாமையை கடைபிடிப்போருக்கு எம்பதி உணர்வு அப்போது
கிடையாது. பிறர்தானே? தன் பெயர்த்திக்கு ஒரு மனவலி என்னும்போது எம்பதி உருவாகிறது பாட்டிக்கு. அதைப்பல வரிகளில் காட்டுகிறார்.
பாட்டியின் முற்போக்கு புரட்சி எல்லா ஆசாரங்களையும் உடைப்பதாக இல்லை. அனைத்தையும் ஏற்று ஆசாரங்களில் பிரதிபலிப்பாகவே
மகிழ்ச்சியாகவே வாழ்கிறாள். அதில் தீண்டாமை இன்னபிற கட்டாயமாக இருக்கும்.
விதவை மறுமணத்தைக் கூட அவள் தன் மகன் குடும்பம் போலவே மறுத்திருப்பாள்.
ஆனால் தான் இளம் வயதில் விதவையானதால், தனக்கு அவ்வலி
தெரிந்ததால் மட்டுமே விதவை மறுமணம் செய்தல் கூடாது என்ற ஆசாரத்தை வீசுகிறார்.
மற்றவரையும் செய்யச்சொல்கிறாள். இது புரட்சியா? தன்னலத்தில் செலக்டிவ் ஆக
ஓர் ஆசாரத்தை விடுவது; மற்றவைகளை ஏற்று மகிழ்வது ? பாட்டியை முற்போக்கு சிகரமென்று புகழலாமா? புகழ நம்மை நினைக்க வைக்க முயன்ற ஆசிரியர் தன்னை அறியாமலேயே ‘'போட்டுக்கொடுத்து' விட்டாரோ?
யுகசந்தி என்பது தலைப்பு. இரு
யுகங்கள் சந்திப்பதாக முடிக்கிறார்.
ஆசாரங்களைக் கடைபிடிக்கும் பாட்டி விதவையான போது இருந்த யுகம். அவளது பெயர்த்தி கீதா விதவையாகி பின்னர் மணம்
செய்யும் இக்கால யுகம். இவை உண்மையில்
சந்திக்கின்றனவா என்றால் இல்லை. விதவை
கீதா ஆசாரத்தை மட்டும் மீறவில்லை. தன் குடும்ப நபர்கள் அனைவரின் (பாட்டியைத்தவிர)
விருப்பங்களையும் மீறுகிறாள்.
"முடிந்தால் ஆசிர்வாதம் பண்ணுங்கோ; இல்லாவிட்டால் போங்கோ!"
என முடியும் மடலது. என்ன தெரிகிறது? அந்த யுகமும் இந்த யுகமும் மாறாமலே இருக்கின்றன. பாட்டியின்
காலத்திலும் விதவை மறுமணம் எதிர்க்கப்பட்டது. இக்காலத்திலும் (கதையில்)
எதிர்க்கப்படுகிறது வெவ்வேறு இரு யுகங்களை
இக்கதை காட்டவில்லை. இக்கதை பாட்டி
மட்டும் ஒரு தோப்பில் தனிமரம். தனிமரம்
தோப்பாகாது. பாட்டி ஒரு யுகமாக மாட்டார். அதாவது முற்போக்கு யுகமாக. ஒரே மாதிரியான யுகஙகள் சந்திக்க முடியா. நேர்கோடுகள் சந்திக்குமா?. யுக சந்தி
இங்கில்லை.
*****