Friday, February 23, 2018

தமிழ்ப் பக்தி புலவர் ஆண்டாள் யார்?


தந்தி தொலைக்காட்சி வரலாறு பேராசிரியர் எம். ஜி. நாராயணனிடம் எடுத்த பேட்டி அடங்கிய‌ யு ட்யூப் காணொளி இணைப்பை தன் திண்ணைக் கட்டுரையில் திருமதி சாரநாதன் கொடுத்தமைக்கு நன்றிகள் பல.  ஆனால் பேராசிரியர் சொன்னதை தங்கள்தங்கள் வசதிக்குத் தக்கவாறு எடுத்துக்கொள்கிறார்கள்.

பேராசிரியர் நாராயணன் சொல்வது:  தானும் தன் மாணாக்கன் கேசவனும் சேர்ந்தளித்த கட்டுரையே அது.  ஆண்டாள் திருவரங்கத்தில் வாழ்ந்த தேவதாசி என்று எந்த ஆதாரத்தை வைத்துச் சொன்னீர்கள் ? என்ற கேள்விக்கு:  “ 7-8 நூற்றாண்டுகளில் தமிழக கோயில்களில் தேவதாசி குடும்பங்கள் வாழ்ந்தன.  அக்குடும்பத்துப் பெண்கள் தங்களை இறைவனுக்கு அர்ப்பணித்து தேவதாசிகளாக வாழ்ந்தார்கள்.  சரி! அப்படி தேவதாசிகள் உண்மையில் இருந்தார்கள் என்பதற்கு ஏதேனும் நிரந்தர ஆதாரங்கள் (கல்வெட்டுக்கள்; இலக்கிய சான்றுகள்) உண்டா? என்று கேட்டதற்கு (இதை அழுத்தி திரும்பத்திரும்ப நிருபர் கேட்கிறார்: அவரின் உள்ளோக்கம் ''இல்லை'' என்ற சொல்லை உருவ‌ அதுவே தலைப்புமாக தந்தி காணொளி வைக்கிறது!) நாராயணன் பதில்:  ‘’அப்படியெல்லாம் சானறுகள் இல.’’  பின் எதை வைத்துச்சொல்கிறீர்கள்? என்ற கேள்விக்கு: ‘’வழிவழி வந்த வாய்சொல்படி (oral tradition) என்பது நாரயாணன் சொல்லிங்கே) மற்றும் கர்ண பரமபரை வ்ரலாறு (Legends) என்பது நாராயணன் வைக்கும் சொல் இங்கே)  இதன்படி அப்படி அனுமானம் செய்ய (நாராயணன் வைக்கும் சொல் Interpretations) முடிகிறது’’.

இக்காணொளியில் நாராயணன் தன் இன்டர்ப்ரடேஷனை மறுக்கவேயில்லை. மேலும் சொல்கிறார்: ஆய்வுகள் நான் காட்டிய வழியில் தொடர்கின்றன என்று முடிக்கிறார்.

நாராயணன் போன்றவர்களாவது வாய்வழி வந்த பாரம்பரியம் (oral tradition), மற்றும் கர்ண பரம்பரை நம்பிக்கை (Legend) இவற்றை வைத்துப் பேசி இன்னும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன இவ்வழியே என, இங்கு எழுதும் திருமதி சாரநாதன் மற்றும் அவர் ஆதாரவாளர்கள் வைக்கும் ஆதாரங்கள் பெரியாழ்வாரின் பாசுரமும் மற்றும் விட்டுச்சித்தன் மகள் கோதை சொன்ன என்று முடியும் தனியனகளுமே ஆகும். 

எடுத்து வளர்த்த மகளை எவரும் 'எடுத்து வளர்த்த மகள்என்று எப்போதும் சொல்ல மாட்டார்கள்;  மகள் என்றே சொல்வார்கள்.  குழந்தைக்காக ஏங்கிய பெரியாழ்வார் பச்சை மதலையாகக் கண்டெடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்து விட்டு, ‘’எடுத்து வளர்த்த மகள்’’ என்று விட்டேத்தியாக பேசுவாரா

குருபரம்பரா பிரபாவம் சொன்ன வரலாறு என்னவெனில் பெரியாழ்வார் அவரின் நந்தவனத்தில் தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்ட ஓர் குழந்தை; அதற்கு ஆண்டாள் எனப் பெயரிட்டு வளர்த்தார்.  இதுவே.  இதை வைத்தே பெரியாழ்வாரின் பாசுரத்தின் மகள் என்ற சொல்லை பார்க்கவேண்டும்.

திருப்பாவைக்கும் நாச்சியார் திருமொழிக்கும் ''தனியன்கள்'' எழுதியது ஆண்டாளே என்பது வேடிக்கையான பேச்சு!  ஏனெனில் வைணவ சம்பிரதாயமே தனியன்களை எழுதியவர்கள் ஆச்சாரியர்களே என்று சொல்கிறது.  இவ்வுண்மையை என் திண்ணைக்கட்டுரையில் காட்டியிருக்கிறேன்.

ஆக, ஆண்டாள் பெரியாழ்வாரருக்குப் பிறந்த குழந்தை என குருப்ரம்பரா பிரபாவமே சொல்லவில்லை.  பாசுரங்களும் சொல்லவில்லை.  நாராயணன் சொல்லும் இன்ட்ரப்ரடேஷனைத்தான் வைரமுத்துவும் செய்கிறார்.  அதை அவரே பண்ணியிருக்க வேண்டும்.  நாராயணன் சொன்னதாகச் சொல்லாமல். 

வரலாற்றாய்வாளர்கள் பலவகைத் தரவுகளைத் தேடுவார்கள்: கல்வெட்டுக்கள்; நாணயங்கள்; புதையுண்ட நகரங்கள்; ஊர்கள் (கீழடி போன்று).  இவைக்குப் பின் அக்கால கட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள்.  சங்க காலத்தில் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிய பிற சான்றுகள் கொஞ்சமே;  எனவே சங்கப்பாடல்களை வைத்தே ஆராய்கிறார்கள்.

இதே நிலைதான்: ஆழ்வார் காலத்துக்கும்.  ஆழ்வார்கள் யாரார்? எப்படி, எங்கே வாழ்ந்தார்கள்? என்ற கேள்விகளுக்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்கள் அரிது.  எனவே அவர்கள் பாடல்களில் தேடவேண்டிய நிலை வருகிறது.  ஆண்டாள் காலமெது? என்ற ஆராய்ச்சியையே அன்னாரின் பாடல்கள் மூலமாகத் தேடி திருவாங்கூர் பலகலைக்கழக தமிழ்ப்பேராசிரியர் மு இராகவையங்கார் எழதிய ஒரு சிறப்பான நூல் '' ஆழ்வார்கள் காலநிலை'' .   கல்விக்கடல் கோபாலைய்யர் ஒரு மாபெரும் வைணவ அறிஞர்; அவர் எழுதியதை (''எம்பெருமானாரும், திருவாய்மொழியும்''  - கல்விக்கடல் கோபாலைய்யர்.  கலா சம்பரக்சன சங்கம், செல்வம நகர், தஞ்சாவூர் உருபா 35 மட்டும்.) மேலும், தமிழ் மண் பதிப்பகம், சிங்காரவேலர் தெரு, தி நகர் சென்னை வெளியிட்ட இவரின் கட்டுரைத்தொகுப்புக்கள் நான்கு) அடிப்படையாக வைத்தே என் திண்ணைக்கட்டுரை வரையப்பட்டது. இவர், ஆழ்வார்களில் பாடல்களின் காணப்படும் சொல்லாடல்களை வைத்து அக்காலத்தில் தமிழரின் சமூக வாழ்க்கைப் பழக்கங்கள் இவை காட்டுகின்றன‌ என சொல்வதும் இரசிக்கதக்கது. தன்னை தலித்து என்று திருமழியிசையாழ்வாரே பாடலில் சொல்லிவிட்டதாலே அவரின் ஜாதியை குலத்தை (அவர் சொல்லின்படி ''குலமில்லா’’ கீழ்நிலையை) நாம் அறிகிறோம்.  அதே சமயம், இன்னொரு தலித்து என்று ஏற்கப்படும் திருப்பாணாற்றாழ்வாரின் ஜாதி அவரின் பாடல்களில் காட்டப்படவில்லை. பாடல்கள் பத்தே பத்து.  வைணவ ஆச்சாரியார்கள் சொல்லி அவரை தலித்து என்கிறார்கள் வைணவர்கள்.  குருபரம்பரா பிரபாவம் ஒரு வரலாற்று நூல் இல்லையெனபதால் அவரை தலித்து என்பதற்கு ஆதாரமேயில்லை. எனவே ஆழ்வார்கள் பாடல்களே தரவுகள்

ஆழ்வார்கள் காலத்துக்குப் பின் பல நூற்றாண்டுகள் சென்ற பின் எழுதப்பட்ட நூலே குருபரம்பரா பிரபாவம்.  இது எழுதப்பட்ட நோக்கம் ஆழ்வார்களின் வாழ்க்கையை வரலாற்று ஆராய்ச்சியாகச் சொல்ல அன்று. மாறாக, ஆழ்வார்கள் வைணவ சம்பிரதாயத்தில் வைக்கப்பட்ட பின்னர் அவர்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தவே.  கொஞ்சம் கற்பனை பண்ணுங்கள்:  இப்பன்னிரு ஆழ்வார்கள் வெறும் திருமால வழிபாட்டாளர்கள்; தங்கள் பக்தியை பாடல்களாக வெளிப்படுத்தினார்கள் என்றுமட்டும் விடப்பட்டு, வைணவ சம்பிராதாயத்தில் வைக்கப்படாமல் போயிருந்தால், குருபரம்பரா பிரபாவமே எழுதப்பட்டிருக்காது.  தேவையேயில்லாமல் எவரெழுதுவார்?

எனவே ஆழ்வார்கள் அனைவரும் அவதாரங்களாக்க வேண்டிய கட்டாயமேற்பட்டது.  பூதேவியின் அவதாரமே ஆண்டாள் என்பது குரு பரம்ப்ரா பிரபாவம் சொன்னது.  வரலாற்றாசிரியர்கள் குருபரம்பரா பிரபாவத்தை எடுப்பதே இல்லை. அது ஒரு ஹேகியோக்ராஃபி (Hagiography) என்று நன்கு தெரிவதால்.  ஹேகியோக்ராஃபிகள் மதத்தலைவர்கள்; பக்தர்கள்; மகான்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும் நோக்கத்தில் தங்கள்தங்கள் மதத்தவராலேயே எழுதப்படுபவை.  கத்தோலிக்கத்தில் புனிதர்கள் வரலாறு கத்தோலிக்க சபையால் எழுதப்பட்டது.  அது வரலாற்று ஆதாரமாகாது. அதே போல குருபரம்பரா பிரபாவம் வரலாறு அன்று.  வைணவர்களுக்காகவே எழுதப்பட்ட பக்திப்பனுவலது.  அப்படியே ஒரு வரலாற்றாசிரியர் எழுதினாலும் அதை மதம் ஏற்காது.

ஆண்டாளின் வரலாறு, இறுதியாக அவரின் பாடல்களின் இருந்தே தெரிய வேண்டும். அங்கேதான் வருகிறது இன்ட்ர்ப்ரெடேஷன்.  அதை எல்லாரும் அவரவருக்கு இயன்ற வரை செய்ய முடியும்.  பெரிய தமிழறிஞரும் இலக்கிய ஆர்வமும் உடையவராயிருந்தால் அதை நன்கு செய்ய முடியும்.  வைரமுத்து சொல்லியபடியே சொன்னால், வைணவர்களோ, இந்துமத பற்றாளர்களோ இதைச் செய்ய முடியாது.  அவர்களுக்கு வேண்டியது ஹேகியோக்ராஃபிதானே? வரலாறு எதற்குமற்றவர்கள்:  ஆணாதிக்க சிந்தனை பற்றி ஆராய்வோர் (இங்கு நாம் ஒரு முற்கால பெண் புலவரைப்பற்றி தெரிய விரும்புவதால்); சமய, சமூக மறுப்பாளர்கள் என்பது அவர் சொல்; அதை மாற்றி எச்சமயத்தையும் சாராதவர்கள்; கசப்போ, கரிப்போ, தனக்கு என்ன தெரிய வந்தது என்பதை காய்தல் உவத்தலின்றி தைரியமாகச் செய்வார்கள்.  எல்லாருக்கும் உரிமை உண்டு. 

ஆராய்ச்சிகள் இதை ஒரு கோடாகக் கொண்டு தொடரட்டும் என்று பேராசிரியர் நாராயணன் சொன்னதைப்போல நாமும் நம்புவோமாக.


*****

No comments:

Post a Comment