Tuesday, January 16, 2018

தமிழ் இலக்கியமும் மதவாதிகளும்

தமிழ் இலக்கியமும் மதவாதிகளும்


தமிழ் இலக்கியம் - சங்க காலம்சங்கம் மருவிய காலம்; காப்பிய காலம்; பக்தி இயக்க காலம்; சிற்றிலக்கிய காலம் விடுதலை போராட்ட காலம்; விடுதலை பெற்ற காலம்தற்காலம் - என்று தனித்தனியே ஒன்றன்பின் ஒன்றாக‌ வளர்ந்து வந்திருக்கிறது.   இவற்றுள் மாபெரும் சிறப்பு வாய்ந்த நூல்கள் பலபல‌.  பக்தி இயக்க கால இலக்கியம் சமய இலக்கியமெனப் போற்றப்பட்டு, தமிழ்மொழியின் இலக்கிய கட்டமைப்பு அடிக்கற்களுள் ஒரு பெரிய அடித்தளமாக விளங்குகிறது.  இக்காலப் பாடல்கள் இந்துக்கடவுளர்களாகிய சிவனையும் திருமாலையும் தனித்தனியாக போற்றிப்பாடப்பட்டவை.  இவர்கள் எத்தனை எத்தனை புலவர்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால். இவர்களுள்  சமயக்குரவர் நால்வர் என்ற சிவனைப்பாடிய சைவப்புலவர்களும்; ஆழ்வார்கள் எனவழைக்கப்படும் வைணவப்புலவர்கள் பன்னிருவரும் இன்று சமய இலக்கியம் யாத்தவர்கள் எனவறியப்படுகின்றனர். 

எல்லா கால இலக்கியநூல்களும் தமிழரின் இலக்கிய பெட்டகங்களாக போற்றப்பட்டு வாசிக்கப்பட்டு வருகின்றன.  உலகமெங்கும் வியாபித்துள்ள தமிழர்கள் - மதம், சாதி கடந்து - அனைத்து கால இலக்கியத்தை த‌ம் முன்னோர் விட்டுச்சென்ற விலைமதிக்க முடியா சொத்து, பிறமொழிகளில் இப்படி கிடைக்காதென்றெல்லாம் பெருமைப்பட்டு தமிழின்பத்தை நுகர‌ வழி செய்கிறது. 

பக்தி இலக்கியத்தின் இன்றைய நிலையென்னசைவக்குரவர்கள் யாத்த தேவாரம், திருவாசகம் சர்ச்சைக்குள்ளாகவில்லை. ஏனென்று என்னை வாசிக்கும்போது புலப்படும்.  வைணவப்புலவர்கள் யாத்த 4000 க்கும் மேற்பட்ட பாடல்கள் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

7ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வாழ்ந்த ஏராளம் திருமால் வழிபாட்டுப் புலவர்கள் அனைவரும் எழுதியவை எங்கே போயின‌? தெரியவில்லை.  ஆனால் அவர்களுள் பன்னிருவர் யாத்தவை இன்று கிடைக்கின்றன.  காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த ஒரு வைணவ ஆசிரியர் பன்னிரு புலவர்கள் எழுதியவைகளைத் தொகுத்தார்;  இது நடந்தது 10ம் நூற்றாணடு.  அதாவது பன்னிரு புலவர்களுள் கடைசிப்புலவர் வாழ்ந்த காலம் 9ம் நூற்றாண்டு.  அவருக்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்து இப்பாடல்கள் ஒரே தொகுப்பில் வைக்கப்பட்டன.  எப்புலவரின் பாடல்கள் முதலில் வைக்கப்படவேண்டுமென்று என்ற வரிசையும் இத்தொகுப்பாளரால் முடிவு செய்யப்பட்டது.  இப்பாடலகளை அவர் தொகுக்க ஒரே காரணம் அல்லது முதற்காரணம் பன்னிருவரும் திருமாலையே முழமுதற்கடவுளாகக் கொண்டு வேறெந்த தெயவத்தையும் ஏத்தாமல் பாடியது.  பக்தி இயக்க காலத்தில் இப்படி ஒரே கடவுளை (திருமாலை) எடுத்துப் போற்றிப் பாடியவர்கள் இவர்கள் பன்னிருவர்தான் போலும்! அல்லது இவர்கள் மட்டுமே தொகுப்பாளருக்கு கிடைத்திருக்க வேண்டும்.  அன்று வாழ்ந்த - 7லிருந்து 9ம் நூற்றாண்டுவரை - ஒரு பன்னிருவர் மட்டும்தான் திருமாலையே ஏத்திப்பாடினராஇருக்கவே முடியாது. திருமால் வணக்கம் தமிழ்மண்ணில் தொன்மையாக இருக்க (மாயோன் மேய காடுறை உலகம் என்பது தொல்காப்பியம். மாயோன் என்பவன் தமிழ்க்கடவுள் அதாவது திருமால்.) ஒரு பன்னிருவர் மட்டும்தான் கிடைத்தனராபுரவலர் இல்லாவிட்டால் மாபெரும் புலவனும் மண்ணில் காணாமல் போவான் எனபது ஆங்கிலப்பாவலன் கிரே ''ஒரு கல்லறைத்தோட்டத்தில் பாடிய இரங்கற்பா''' என்ற கவிதையில் சொல்கிறான்.   கம்பருக்கும் கூட ஒரு திருவெண்ணைநல்லூர் சடையப்பச் செட்டியார் புரவலராக இருந்ததனால் இன்று நம்மிடையே வாழ்கிறாரன்றோ!  செட்டியார் இல்லையென்றால் கம்பராமாயணம் இல்லை :-) இப்பன்னிருவருக்காவது ஒருவர் கிடைத்தாரே என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ளலாம்.

பின்காலத்தில் ஒரு வைணவத்தலைவர் வந்தார். அவர் பெயர் இராமானுஜர். அவர் இந்துமதத்தில் ஒரு தத்துவத்தை உருவாக்கினார். அதன்பெயர் விசிஷ்டாத்வைதம்.  இது சங்கரரின் வேதாந்தத்திலும் சிறிது விலகியது; ஆனால் அவ்விலக்கமே புதிய தத்துவத்தின் உயிராகும்.  இவர் தன் தத்துவம் முன்சென்ற தொகுப்பாளரின் பாடல்களில் ஒலிக்கக்கண்டார்.  அப்பாடல்களின் மேல் தன் தத்துவத்தை ஏற்றி, அப்பன்னிருவருள் எவரின் பாடல்கள் தத்துவங்களை வெகுவாக‌ உள்ளடக்கியதே அவரையே அப்பன்னிருவரின் முதல்வராக்கினர். அவர்தான் நம்மாழ்வார். வைணவர்கள் என்ற குலத்துக்குத் தலைவர் எனவே குலபதி நம்மாழ்வாரே. இவர்கள் ஆழ்வார்கள் எனவழைக்கப்பட்டனர். திருமால் பக்தியில் ஆழங்கால் பட்டு தம்மை மறந்த நிலையில் பாடல்கள் எழுதினார்கள் எனவே ஆழ்வார்கள் என்ற பேர்.  இவர்கள் பாடல்கள் அனைத்தையுமே தம் புதிய மதத்தின் வழிபாட்டில் கட்டாயமாக்க, இப்பாடல்களின் புகழ் மென்மேலும் பெருகியது; அல்லது வெளித்தெரிந்தன‌.பின்னர் இராமானுஜர் செய்கைகள். வகுத்த கோயில் வழிபாட்டு முறைகள்; இப்பாடல்களுக்கு தன் சீடர்கள் சிலரை வைத்து எழுதிய விளக்கவுரைகள் - எல்லாமே சேர்ந்து வைணவ சம்பிராதாயம் என்ற பெயரில் உள்ளடக்காமானது.  மேலும் - நம்மாழ்வாரின் நான்கு நூல்கள் நான்கு வேதங்களில் சாரங்களென்றும்திருமங்கையாழ்வாரின் ஆறு நூல்கள் வேதங்களின் ஆறங்கங்களெனவும், ஏனைய ஆழ்வார்கள் எண்மர் நூல்கள் எட்டு உபாங்கஙகளெனவும் - அல்லது ஒத்த சிறப்புடையவை - என்பது ஆசாரிய சூர்ணிகை.  வைணவர்களுக்குச் சொன்னது.  விளக்கங்கள் - அல்லது வியாக்யானங்கள் - எழதிய இராமானுஜரின் சீடர்கள் - மற்ற வைணவ ஆசிரியர்கள் - இப்படி வேத சாரங்கள் எனபதை வலுப்படுத்தினார்கள். இராமாயணம், மஹாபாரதத்தோடு இணைத்து விளக்கங்கள் கூறினார்கள்.  ஆழ்வார்களில் நம்மாழ்வார் தத்துவஞானி என்றேன். எனவே அவரின் திருவாய்மொழி விளக்கத்தைப் பெறுவதில் முதலிடம் பெற்று புகழடைந்தது.  இதைக்கவனித்த பிராமணல்லாதோர் தாமும் விளக்கம் கொடுத்தனர். அவை 'தமிழர்' விளக்கம் எனவாயிற்று.  வைணவ ஆசாரியர்கள் (பிராமணர்கள்) கொடுத்தவை ''படிகள்'' எனவழைக்கப்பட்டன. மேற்சொன்ன வைணவ சம்பிரதாயம், படிகளையே ஏற்றது.  ஆனால் அப்படிகள்  மிகவும் கடினமான மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டன.  மேலும் தனியன்கள் எனவழைக்கப்படும் பாடல்களையும் இப்புலவர்களின் பாடல்களோடு இணைத்தார்கள் வைணவ ஆசிரியர்கள் தாமே எழுதி..  தனியன் என்பது சிறப்புப்பாயிரம்.  இது வடமொழியிலும் தமிழிலும் யாக்கப்பட்டு இணைக்கப்பட்டது.  திருவாய்மொழிக்கும், பெரிய திருமொழிக்கும் கண்ணிநுண்சிறுத்தாம்புக்கும் இருமொழிகளிலும் தனியன்கள் சேர்க்கப்பட்டன.  உய்யக்கொண்டார் திருப்பாவைக்கும், திருக்குருகை காலப்பன் பேயாழ்வார் திருவ்ந்தாதிக்கும், மணக்கால் நம்பி பெருமாள் திருமொழிக்கும்  எழுதினார்கள். இராமானுஜர் வந்த காலத்தில் முழுத்தொகுப்புக்கும் தனியன்கள் எழுதப்பட்டு முடிந்ததுஇராமானுஜருக்குப் பின், 14ம் நூற்றாண்டில் ஒரு வைணவ ஆசிரியர் இப்பன்னிரு புலவர்களையும் தெய்வநிலைக்கேத்தினார். பெண்பால் புலவரை திருமாலின் மனையாட்டியின் (பூதேவி) அவதாரமாக்கினர்; ஆண்பால் புலவர்களையும் திருமாலின் திருமேனி, மற்றும் திருமால் ஆயுதங்கள், போன்றவைகளிலிருந்து அவதரித்தோர் என்றாக்கினார். இப்புலவர்கள் வாழ்க்கை வரலாறு இவ்வாறாக 500 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்படுகிறது குருபரம்பரா பிரபாவம் என்ற நூலாக‌.  இது வைணவ சம்பிராதயத்தின் அடிக்கல்லாகி திகழ்கிறது.  ஆக, சம்பிரதாயத்தை இராமானுஜர் மட்டுமன்று; பிறரும் வலுப்படுத்தினார்கள்

மெல்ல மெல்ல பன்னிரு தமிழ்ப்புலவர்களும் பெருவாரியான தமிழ்மக்கள் கூட்டத்தினரிடமிருந்து விலக்கப்பட்டு, சிறுவாரியான வைணவத்தமிழ்க்கூட்டத்தில் சென்றடைந்தார்கள். ஆயர்பாடியிலிருந்து அக்ரஹாரத்துக்குள் சென்றடைந்தாள் ஆண்டாள்; அல்லது அடைக்கப்பட்டாள். தமிழரின் பொதுச்சொத்தான இப்பன்னிரு புலவர்களும் ஒரு சிறிய கூட்டத்தின் தனிச்சொத்தாக்கப் பட்டதை.  தவறென்று சொல்லவில்லை; விளைவு ஒருவருக்கு இலாபம்; இன்னொருவருக்கு நட்டம் என்பதுதான் காட்டப்படுகிறது. உண்மையென்னவென்றால், தனியன்களுக்கு மட்டுமே இவ்வைணவர்கள் சொந்தக்காரர்கள். ஆழ்வார் பாடல்கள் யாராருக்குச் சொந்தம் என்பதே கேள்வி. அதாவது, இப்பாடலகளை மற்றவர் வாசிக்கலாம். ஆனால் அவை பெரும்பக்தியோடே வாசிக்கப்பட வேண்டும்; போற்றப்படவேண்டும். இதை எப்படி எல்லாத்தமிழரும் செய்ய முடியும்அவை தமிழ் இலக்கியத்தின் சிறப்பான பாடல்கள் என்றுதானே வாசிக்க முடியும்மேலும் அப்பாடல்களில் சொல்லப்பட்டிருப்பது எவையெவைஎன்பதை அவரவர் விருப்பத்திற்கேற்ப சொல்லிவிட முடியாது.  அப்படியே சொன்னாலும், அது வைணவருக்கு அதிர்ச்சியைத்தரக்கூடாது.   இப்பாடல்கள் நமக்கு என்ன சொல்கின்றன? அவைகளின் இறைச்சிகள் யாவை? என்பனவெல்லாம் வைணவர்கள் விருப்பப்படிதான் இருக்க வேண்டும்.  தடியெடுத்தவெனெல்லாம் தண்டல்காரன் ஆகக்கூடாது என்பது எழுதாக்கட்டளை;.  எட்டுகோடி தமிழ்மக்களுக்கா? இவர்களுக்கு மட்டும்தானா? என்பதுதான் சங்கடமான கேள்வி.

பக்திப் பாடல்கள் பக்தி இலக்கியமாக்கப்பட்டு, ஒரு மதக்கூட்டத்துக்கு மட்டுமே என்ற நிலையில்தமிழரின் பொதுச்சொத்து - புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டுவிட்டு, பட்டாவையும் அள்ளிக்கொண்டது போல‌ -  பறி போனது!.    இதே நிலை தொடர்கிறது. இந்நிலையின் நீட்சியே வைரமுத்து கிளப்பிவிட்ட சர்ச்சை.  இப்புலவர்களின் பாடல்களை வாசிக்கலாம்.  இவர்களின் வாழ்க்கையை (அப்பாடல்கள் மூலமாக)  ஆராயவே கூடாது.  ''குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன். நலங்களாய நற்கலைகள் நாவிலும் நவின்றிலேன்'' என்று ஏன் சொல்கிறார்? என்று கேட்கக்கூடாது.  சத்தம் காட்டாமல் வாசித்துவிட்டு வெளியே செல் என்று நூலகத்தில் செய்வது போல.  உனக்குரிமை இல்லவே இல்லை உன் விருப்பப்படி புரிய.  ‘' பாடல்களுக்கு பொழிப்புரை, பதவுரை, விளக்கவுரை எல்லாமே நாங்கள் எழுதிவைத்தவையேசிறிது விலகினாலோ எம்மனங்கள் புண்படும்!’’ 

நல்லவேளை, கம்பரின் காலம் இராமானுஜருக்குப் பின்.  எனவே அது வைணவ சம்பிரதாயத்தில் சேர்க்கப்படவில்லை.  கம்பராமாயாணம் ஒரு வைணவநூல்.  கம்பர் ஒரு பழுத்த வைணவர்.  திருவரங்கத்தில் அல்லவா இந்நூல் அரங்கேறியது!  எனினும் இது வைணவ சம்பிராதாயத்தில் சேர்க்கப்படவில்லை.  அதாவது கட்டாயம் ஆராதனையில் ஓதப்படவேண்டிய அவசியமில்லை. கம்பராமாயாணத்தை கம்பர் முழுமை செய்தாரா? இராமனை பிராமணனாக்கினாரா? என்றெல்லாம் கம்ப்ராமாயணத்தைப் பற்றி, பின்னர் கம்பரின் வாழ்க்கை பற்றியும் - கம்பரை ஏன் நாட்டைவிட்டு துரத்தினான் சோழன்? ஒட்டக்க்கூத்தருக்கும் இவருக்கும் என்ன பிரச்சினை? கம்பரின் மகன் சோழ இளவரசியை கவரப்பார்த்தானா? இல்லை அம்பிகாபதி என்ற பாத்திரமே புனைவா? என பலபல எல்லா வகை கேள்விகளையும் விமர்சகர்களும் பொதுமக்களும் வைக்கலாம்.  இந்துக்கள், குறிப்பாக வைணவர்கள் ஒன்றும் சொல்வதில்லை.  எனவேதான் ஒரு முசுலீம் அறிஞர் (மறைந்த நீதிபதி மு மு இசுமாயில்) கம்பராயாணத்தை ஆராய்ந்து ஒரு நெடுந்தொடரை வாராவாரம் ஆனந்த விகடனின் எழுத முடிந்தது.   ''கம்பனின் மறுபக்கம்'' என்ற விமர்சனத்தை புலவர் ஆ.பழநியால் வைக்க முடிகிறது.@

கம்பர் பிழைத்தார்.  பன்னிரு தமிழ்ப்புலவர்கள் மாட்டிக்கொண்டார்கள். 

@   ''கம்பரின் மறுபக்கம்''  புலவர் ஆ.பழனி (2016)  New Century Book House (P) Ltd. Rs.140/-  ( It's available in the ongoing Book Fair 2018 Chennai)

1 comment:

  1. An edited version of this blog post appears in www.puthuthinnai.com (Tamil internet magazine) dated 21st Jan 2018.

    ReplyDelete